கட்டுரை

முயற்சிக்கடலில் மூன்றாவது அணி

ஆர்.முத்துகுமார்

சூரபத்மன் தலைகள் வெட்ட வெட்ட முளைப்பது போல் திமுக மாறி அதிமுகவும், அதிமுக மாறி திமுகவும் என்று இருகட்சிகளும் மாறிமாறித்தான் ஆட்சிக்கு வருகின்றன. இதற்கு இந்த செந்தில் ஆண்டவன்தான் ஒரு வழி காணவேண்டும்.

---1983 திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே. மூப்பனார்.

மூப்பனாரின் முயற்சி

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஓர் அணியைக் கட்டமைக்கும் முயற்சிகள் எண்பதுகளில் தொடங்கினாலும், செயல்வடிவம் பெற்றது 1989 சட்டமன்றத் தேர்தலின்போதுதான். எம்.ஜி.ஆர் மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இருகூறுகளாகப் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்தது. அதன் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சியான திமுக தனி அணி அமைத்திருந்தது. ஆகவே, அதிமுக, திமுகவை வீழ்த்த இது சரியான தருணம் என்று கணித்தது காங்கிரஸ்.

ஆளுநர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேலாக நீட்டிப்பு செய்தது, மறைமலை நகரில் காங்கிரஸ் மாநாடு நடத்துவது என்பன போன்ற காரியங்களைச் செய்து காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. பிறகு தனது தலைமையில் தேர்தல் கூட்டணியையும் அமைத்தது. அந்த அணியில் முஸ்லீம் லீக் (அப்துஸ் சமது), அம்பேத்கர் மக்கள் இயக்கம், குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு), கிறித்தவ ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்ற இருபெரும் கோஷங்களுடன் 208 தொகுதிகளில் போட்டியிட்டது. மூப்பனாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழ்நாட்டுக்கு பதினான்கு முறை வந்து சூறாவளிப் பிரசாரம் செய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனாலும் தேர்தலின் முடிவில் காங்கிரஸுக்கு வெறும் 26 இடங்களே கிடைத்தன. அந்தக் கட்சிக்கு 22 சதவிகித வாக்குகள் கிடைத்திருந்தன.

பாமக எழுதிய பலப்பரீட்சை

இனி விஷப்பரீட்சை வேண்டாம் என்று முடிவெடுத்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் திராவிடக் கட்சிகளின் பக்கமே ஒதுங்கிவிட்டது. புதிதாக உருவான பாமக நாங்களே அதிமுக, திமுகவுக்கான மாற்று என்று சொல்லி 1991 பொதுத்தேர்தலில் தனி அணி அமைத்தது. அந்த அணியில் முஸ்லீம் லீக் (அப்துல் சமது), குடியரசு கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்), தமிழர் தேசிய இயக்கம் (பழ. நெடுமாறன்), தமிழ்த் தேசியப் பொதுவுடைக்கட்சி ஆகியன இடம்பெற்றன.

மது ஒழிப்பு, சமூக நீதி, தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு, சிறுபான்மையினர் ஆதரவு என்பன போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மாற்று அரசியலை பாமக முன்வைத்தபோதும், அவையெல்லாம் ராஜீவ் அனுதாப அலையில் கரைந்துபோயின. என்றாலும், அந்தக் கட்சிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் என்கிற ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் கிடைத்தார்.

மதிமுக , பாமகவின் இருபக்க முயற்சிகள்

மூன்றாம் அணிக்கான மூன்றாவது முயற்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  முன்னெடுத்தார். திமுகவிலிருந்து பிரிந்து உருவான மதிமுக, ஒரே சமயத்தில் ஆளுங்கட்சியான அதிமுக, ஆண்ட கட்சியான திமுக என்ற இருபெரும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் நடத்தியது. இருகட்சிகளுக்குமான மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியது. என்றாலும், தேர்தலுக்கு முன்னர் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க விரும்பியது. குறிப்பாக, பாமக, சிபிஎம், ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம் பெற்றன.

வைகோ - ராமதாஸ் சந்திப்பு நடந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த அணி உருவாகவில்லை. மாறாக, இரண்டு மாற்று அணிகள் உருவாகின. ஒன்று, மதிமுக தலைமையில் சிபிஎம், ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளைக் கொண்ட மக்கள் ஜனநாயக அணி. அந்த அணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக வைகோவை முன்மொழிந்தார் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத். இன்றைக்குப் பேசப்படும் “கூட்டணி அரசு” அம்சத்தை அப்போதே முன்வைத்தது மதிமுக கூட்டணி.

இரண்டாவது, பாமக தலைமையில் திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளைக் கொண்ட ஊழல் ஒழிப்பு  சமூகநீதி முன்னணி. தேர்தலுக்குப் பிறகு பாமக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக்கப்படுவார் என்ற வாக்குறுதியைக் கொடுத்தது.

கட்டமைப்பு ரீதியாக ஓரளவுக்குப் பலமாக உள்ள மதிமுக தலைமையில் ஓர் அணி, குறிப்பிட்ட பிராந்தியத்தில் அடர்த்தியான வாக்குவங்கியை வைத்திருக்கும் பாமக தலைமையில் ஓர் அணி என்று இரு மாற்று அணிகள் உருவானபோதும், அதிமுக ஆட்சியின் மீதான எதிர்ப்பலை, திமுக - தமாகா - சிபிஐ திடீர்க் கூட்டணி, ரஜினி ஆதரவு ஆகியன மாற்று முயற்சிகளை முறியடித்தன. 1996 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஆக, மூன்றாவது அணி முயற்சி மீண்டும் தோல்வி.

ஆனாலும் 2001 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக மூன்றாவது அணியாகக் களமிறங்கியது. என்ன ஒன்று, அதிமுக  திமுகவுக்கு மாற்று என்று அழுத்தமாகச் சொல்லமுடியவில்லை. காரணம், தேர்தலுக்குச் சில நாள்கள் முன்புவரை திமுக அணியில் இடம்பெற்று, தொகுதி ஒதுக்கீட்டுச் சிக்கலால் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டியிட்டது மதிமுக. அப்போது வானவில் கூட்டணியை உருவாக்கி பெருவெற்றியைப் பெற்றுவிட்டது அதிமுக.

விஜயகாந்தின் வியப்பூட்டிய முயற்சி

கடந்த காலங்களில் மூன்றாம் அணி முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் எல்லாம் 2006 தேர்தலில்  பாதுகாப்பான கூட்டணிக்குள் இணைந்துகொள்ள, விஜயகாந்தின் தேமுதிக முதன்முறையாகத் தேர்தலில் இறங்கியது. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிகவைத் தேர்வு செய்யுங்கள் என்று பிரசாரம் செய்த அவர், தமிழகம் முழுக்க வேட்பாளர்களை நிறுத்தினார். சினிமா வழியே கிடைத்த பிரபல்யமும் ரசிகர் மன்றம் என்கிற அடிப்படைக் கட்டமைப்பும் அவருக்குப் பேருதவியாக இருந்தன.

ஊடகங்களின் கணிசமான ஆதரவும் தேமுதிகவுக்கு இருந்தது. அந்தக் கட்சிக்குக் கணிசமான அளவில் வாக்குகள் கிடைத்தன. அந்தக் கட்சியின் ஒற்றை உறுப்பினராக வெற்றிபெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார் விஜயகாந்த். அதுநாள்வரை அவரை அலட்சியப்பார்வை பார்த்த கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்தன. காரணம், அவர் பெற்ற எட்டு சதவிகித வாக்குகள்.

ஆனால் 2011 தேர்தலில் மாற்று அணி விஷயத்தில் நம்பிக்கையிழந்த விஜயகாந்த், தேர்தல் வெற்றிகளே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்ற எண்ணத் துடன் கூட்டணி அரசியலில் கலந்தார்.

மாற்று அணிகள் 2016

2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் மாற்று அணி கோஷம் உரத்த குரலில் எழுந்துள்ளது. அதைத் தொடங்கிவைத்தது பாமக. ஐம்பதாண்டுகாலத் தமிழகத்தின் சீரழிவுக்குத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம் என்று சொன்ன பாமக, அவற்றுக்கான மாற்று பாமகவே என்றது. அந்த முழக்கத்துக்கு உருவம் கொடுக்கும் வகையில் அதிமுக, திமுக இல்லாத அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் முதல் படியாக பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்த பாமக, அவரை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் பாமக தலைமையிலான அணியில் இடம்பெறலாம் என்று கூறியுள்ளது. ஆனால் இதுநாள்வரை எந்தவொரு கட்சியும் பாமக அணியில் அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை.

பாமகவின் முயற்சிக்கு இணையாக மக்கள் நலக்கூட்டியக்கம் என்ற மாற்று அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். உண்மையில், கூட்டணி ஆட்சி கோரிக்கையை முன்வைத்தே முயற்சிகள் தொடங்கின. பின்னர் இடதுசாரிகள், மதிமுக, மமக போன்ற கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது.

திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த அணியிலிருந்து மமக வெளியேறியது. தற்போது எஞ்சிய நான்கு கட்சிகளைக் கொண்ட அணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் அந்த இயக்கம் தேர்தல் அணியாக மாறுமா என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளின் முடிவுக்காகக் காத்திருக்கிறது இந்த அணி.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக அல்லாத அணியை உருவாக்கி, கணிசமான வாக்குகளையும், வெற்றியையும் பெற்றது பாஜக. அந்த நம்பிக்கை காரணமாகவே, கோடி உறுப்பினர் சேர்த்து மோடி ஆட்சி அமைப்போம் என்று சொல்லி அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்துகிறது பாஜக. ஆனால் பழைய கூட்டணிக் கட்சிகள் எதுவும் தற்போது பாஜக வசம் இல்லை என்பதும் புதிய கட்சிகள் வருவதற்கான சமிக்ஞைகள் ஏதும் இதுவரை இல்லை என்பதும்தான் உண்மை.

உண்மையில், தமிழக அரசியல் களத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான அணியைக் கட்டமைத்து, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வது என்பது அத்தனை எளிதான சங்கதியல்ல. நுணுக்கமான திட்டமிடலையும் கடுமையான உழைப்பையும் கோருகின்ற பணி. முக்கியமாக, வெற்றிபெறக்கூடிய மாற்று அணி என்ற எண்ணத்தை வாக்காளர்கள் மனத்தில் உருவாக்குவது பெரும் சவால். அதனை சமாளிப்பதில்தான் மாற்று அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

இம்முறை இரண்டுக்கும்  அதிகமான அணிகள் மாற்று கோஷத்தை முன்னெடுத்துள்ளன. நேர்த்தியாகத் திட்டமிட்டு வலுவான மாற்று அணியைக் கட்டமைக்கத் தவறும் பட்சத்தில், இந்த மாற்று அணிகள் எல்லாம் மூன்றாம் இடத்துக்கான சகபோட்டியாளர்களாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

இந்த இடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சொல்லியிருக்கும் ஒரு கருத்தை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்கள் எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்களே”. அது உண்மையெனில், எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் அதிமுக, திமுகவுக்கான மாற்றை முழுமனத்தோடு விரும்பும் பட்சத்தில் மாற்று சக்தி சாத்தியமே. அதை வாக்காளர்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வியைச் சுற்றியே 2016 தேர்தல் களம் சுழன்றுகொண்டிருக்கிறது!

நவம்பர், 2015.